குறைந்த விலையில் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் எ.ஜி&பி பிரதாம் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் ஏ.ஜி&பி பிரதாம் நிறுவனம் இந்தியாவில் எரிபொருள் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் முதலிடம் வகிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் சார்பில் அடுத்த 8 வருடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 2700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ராமநாதபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த மாவட்டங்களில் எரிபொருள் விநியோகத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 25 சி.என்.ஜி நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 31,000 வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின்படி வீட்டின் சமயல் அறைக்குள் குழாய் அமைத்து இயற்கை எரிவாயு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து போக்குவரத்து நிறுவனங்களுக்கு சி.என்.ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படும். இதனால் கார், ஆட்டோ, பேருந்து மற்றும் லாரிகளில் எரிவாயு நிரப்பிக் கொள்ளலாம்.
இதில் முதற்கட்ட துவக்கமாக ராணிப்பேட்டையில் ஒரு சி.என்.ஜி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை விட 50% குறைவான விலையிலும், எரிவாயு சிலிண்டரை விட 22% சேமிப்பு வழங்கப்படும். இதனால் ஏராளமானோருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குழாய் மூலமாக அமைக்கப்படும் இந்த எரிவாயுவுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தினால் போதும். எனவே இந்தத் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.