தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தல், கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுதான் வருகிறார்கள். இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் அண்ணா நகர் காவல்துறையினர் வண்டியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் வண்டியூர் சவுராஷ்டிராபுரம் 12வது தெருவில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அத்துடன் அங்கு இருந்த முனியசாமியின் மனைவி முத்துக்காளி(வயது 42), கோவிந்தன்(38) போன்றோரை பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில் வீட்டை சோதனை மேற்கொண்டபோது அங்கு 50 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூபாய்.50 லட்சமாகும். அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களிடமிருந்த 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய், செல்போன்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.