பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ரஹ்மான் உட்பட பல பேர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன்-1 திரையரங்குகளில் வெளியாகி நேற்றுடன் 50வது நாளை நிறைவு செய்து இருக்கிறது.
மேலும் தீபாவளிக்கு வெளியாகிய கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், அதன்பின் வந்த லவ் டுடே, காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களை தாண்டி, தற்போதும் பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் 2.0 படத்திற்குப் பின் தமிழில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்கும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.