50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை கட்டிப்போட்டு அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசித்த 32 வயது வாலிபர் ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான கூக்கால் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு நிலத்தை வாங்கி, கட்டிடம் கட்டி தங்கும் விடுதி நடத்தி வருகின்றார். அந்த விடுதியில் கூக்கால் கிராமத்தில் வசித்த கணவனை இழந்த 50 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வாலிபருக்கு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் அவர்கள் கணவன்-மனைவியாக கடந்த மூன்று வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து 50 வயதுடைய பெண்ணை 32 வயது வாலிபர் திருமணம் முடித்ததால் அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கோபமடைந்தனர். மேலும் அந்தப் பெண்ணின் மகள் கல்யாணமாகி பக்கத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார். மகள் வயதுடைய வாலிபருடன் சேர்ந்து வாழ்வதால் தங்களுக்கு அவமானமாக இருப்பதாக பெண்ணின் சொந்தக்காரர்கள் கூறினார்கள். இதனையடுத்து ரெண்டு பேரையும் பெண்ணின் சொந்தக்காரர்கள் பலமுறை கண்டித்தும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் சொந்தக்காரர்களுக்கும், வாலிபருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடந்தது. அப்போது கூக்கால் தோட்டத்து பகுதி வழியாக கடந்த ஆறாம் தேதி அந்த வாலிபர் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் 4 பேர் வாலிபருடன் தகராறு செய்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பின் தாங்கள் கொண்டு வந்த கயிற்றால் அந்த வாலிபரின் கை கால்களை கட்டி போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலினால் வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த நான்கு பேரையும் விரட்டி அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த வாலிபரை தாக்கிய சம்பவத்தைத் கிராமத்தில் வசித்த ஒரு நபர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் போட்டுவிட்டார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் சொந்தக்காரரான பூவேந்திரன், அவருடைய நண்பர் வரதராஜன், கார்த்திக், சின்னத்தம்பி ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.