சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆற்றில் இடுப்பளவுக்கு தண்ணீர் செல்வதால் உடலை அடக்கம் செய்வதற்காக மறுக்கரைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ரப்பர் படகு மூலம் உடலை ஆற்றின் மறுக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்தார்கள். இது போன்ற சூழ்நிலையால் இறந்தவரின் உடலுடன் ஒரு சிலர் மட்டுமே அடக்கம் செய்ய செல்ல முடிகின்றது. ஆகையால் சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.