நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிர்களை செம்பேன் வைரஸ் தாக்கிவருவதால் சுமார் 50 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனுர், நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு அது வளர்ந்துவரும் நிலையில் தற்போது செம்பேன் என்ற வைரஸ் மற்றும் கள்ளிப்பூச்சி ஆகியவை பயிர்களை தாக்கி சேதப்படுத்தி வருகின்றது.
இதனால் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முன்பெல்லாம் இத்தகைய பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் மட்டுமே காணப்படும் என்றும் இந்த ஆண்டு புதிதாக செம்பேன் வைரஸ் மற்றும் கள்ளிப்பூச்சி தாக்குதல் உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தோழூர், புதுப்பாளையம் பகுதிகளில் அதிகளவாக 300 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்குகள் செம்பேன் வைரசால் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு சுமார் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் விவசாயிங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.