Categories
மாநில செய்திகள்

பணியின் போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்புக்கு மருத்துவர்கள் நன்றி!

கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல், உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து துறையினரின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என அவர் கூறியுளளார்.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு அரசு ஊழியர், தனியார் பணியாளர் உயிரிழந்தால் பணியை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி கூறியுள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலியில் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |