பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் மண்பானை மற்றும் கடம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் கோடைக்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் மண்பானைகள், பொங்கல் பானைகள், மண் கூஜாக்கள், அகல் விளக்குகள் மற்றும் அலங்கார மண்பாண்ட பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியின் போது பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான விநாயகர் சிலைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யும் மண்பானைகள், அகல் விளக்குகள், மண் கூஜாக்கள், மற்றும் விநாயகர் சிலைகள் போன்றவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி தங்களது குடும்பத்தை பராமரித்து வந்துள்ளோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் நாங்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதகாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில தளர்வுகளை அளித்து அரசு பணி செய்ய அனுமதி அளித்துள்ளதால் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கின்றது. இதனால் அப்பகுதியில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வாறு ரூபாய் 50 லட்சத்திற்கும் அதிகமான மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி இருப்பதகாக தொழிலாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது பொருட்களை விற்பனை செய்ய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இதனால் தமிழக அரசு விரைவில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்தால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளை விற்பனை செய்து எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வோம் . மேலும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களை நடத்த அனுமதி அளித்தால் பொங்கல் பானைகள், கரகம், மற்றும் அகல் விளக்குகள் ஆகியவை அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படும். எனவே மேற்கூறிய அனைத்திற்கும் அனுமதி அளித்து எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.