ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றிய பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
மற்ற நாடுகளை விட சீனாவில் மக்கள் தொகை அபரீதமாக பெருகி வந்தநிலையில் 1979-ம் ஆண்டு சீன அரசு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. இதையடுத்து, சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளம் வயதுடையோர் எண்ணிக்கை குறைந்தது.
சீனாவில் இன்னும் 30 ஆண்டுகளில் மனிதவளம் மிகவும் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைக்கு பின் சீன அரசு அதிரடியாக ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றி 2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதியளித்தது.
இந்நிலையில் 18 மாதங்களில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்தது. முன்பை விட இந்த எண்ணிக்கை அதிகம் தான் என்றாலும், நாடு மனித வள இழப்பை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதால் சீன அரசு அதனை எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.