பழம்பெரும் நடிகையான ரங்கம்மாள் பாட்டி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரங்கம்மாள் பாட்டி. இவர் வயது மூப்பின் காரணமாக சற்று முன் காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு நடித்த கிமு என்ற படத்தில் இடம்பெற்ற ‘போறதுதான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போ பா’ என்ற காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தவர். இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பலரின் படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் காரணமாகவும் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். ரங்கம்மாள் பாட்டி இன்று காலமாகியுள்ளார். 40 வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடித்த போதிலும் அவர் கடைசியில் ஒரு கூரை வீட்டில்தான் தங்கியிருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் உட்பட கைவினைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று மதியம் இவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.