கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரா நகரில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த ரவிசங்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மஜத வேட்பாளர் ரவிசங்கர் வேட்பு மனுவில், தன் மீதுள்ள பழைய குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களையும் தன் கையில் இருந்த 500 கிலோ நகைகள் பற்றிய விவரங்களையும், வாடகையின் மூலம் பெறும் ரூ.3.6 லட்சம் வருவாயையும் மறைத்துள்ளார். மேலும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அடையாள அட்டை அவர் வைத்திருந்தார். பல பொய்யான தகவல்களை வேட்பு மனுவில் தெரிவித்ததாக அந்த மனுவில் கிருஷ்ணாப்பா தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், ரவிசங்கருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளது. பொய்யான தகவலை வேட்பு மனுவில் அளித்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டபட்ட முறைகேடான செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இந்த உண்மையான தகவல்களை வேட்புமனுவில் குறிப்பிட தவறியதன் மூலம் அரசியல் சாசனத்தால் வாக்காளருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமை மற்றும் தகவலை அறிந்து கொள்ளும் அடிப்படை உரிமை ரவிசங்கர் மீறி உள்ளார். இதனையடுத்து எழுத்துப்பூர்வமாக அவர் தாக்கல் செய்துள்ள பதிலில் தன்னிடம் உள்ள 500 கிலோ நகைகளின் உண்மையான மதிப்பு ஒப்புக் கொண்டுள்ளார். அவரது வருமான வரி கணக்கு மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர் என்ற நிலைக்கு மாறான நகை கையிருப்பு அவரிடம் உள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே ரவிசங்கரின் தேர்தல் வெற்றி ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.