சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வைத்தியலிங்கம்-சித்ரா தம்பதியினர். இவர்களது மகன் கிருத்திக்பாபு. அம்மாபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருத்திக்பாபு நண்பன் கார்த்திகேயன். கிருத்திக்பாபுவிடம் கார்த்திகேயன் ரூ 500 கூகுள் பே செய்யுமாறு கூறியுள்ளார். அதோடு அந்த பணத்தை கூகுள் பே மூலம் வேறு ஒரு எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி அந்த எண்ணுக்கு கிருத்திக்பாபு பணத்தை அனுப்பினார்.
ஆனால் அவர் அனுப்பிய பணம் ஒரு பெண்ணின் அலைப்பேசி எண்ணுக்கு சென்று விட்டதாகவும், அந்த பெண் உன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடப்போவதாகவும், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் கார்த்திகேயன் தெரிவித்தவுடன் கிருத்திக்பாபு அதிர்ச்சி அடைந்தார். மேலும் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துகொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். அதை நம்பிய கிருத்திக்பாபு அவர் வீட்டில் இருந்த 9 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் எடுத்து வந்து கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார்.
பிறகு நகைகளை எடுத்துக்கொண்டு கார்த்திகேயன் காணாமல் போனார். இதையடுத்து வீட்டில் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா கிருத்திக்பாபுவிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.