சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 500 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் இன்னும் 3 நாட்களில் செயல்படும் என ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணியனூர் சட்ட கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் மற்றும் கோரிமேடு அரசு சட்டக்கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றது.
இதனையடுத்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்றினால் தற்போது பாதிக்கப்பட்ட 598 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் நலன் கருதி சேலம் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவடையும் என ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.