வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் ராஜவேலு வின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்ரமணியன், மகேஸ்வரன், சசிதரன் போன்றோர் பங்கேற்றனர். இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் உள்ள மண்டல கனரா வங்கி அலுவலகத்தில் அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்திற்கு துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்க, அகில இந்திய பொதுச் செயலாளர் மணிமாறன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, நம் நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தான் தொழில் துறைக்கும், விவசாயத் துறைக்கும், மாணவர்களுக்கும் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் துறை சார்ந்த கடனாக பொதுத்துறை வங்கிகள் 12 லட்சம் கோடி வழங்கப்படுவதாகவும், பொது மக்களின் சேமிப்பு பணம் 146 லட்சம் கோடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததால் பொது மக்களின் சேமிப்பு பணத்திற்கு உத்தரவு இல்லாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 600 வங்கி கிளைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 400 கோடி ரூபாய் காசோலை, 100 கோடி ரூபாய் ரொக்கம் என மொத்தம் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.