பிரபல கார் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறையினர் சுமார் 5,000 கார்களை திருடிய மிகப் பெரிய கார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தவர் அணில் சவுகான். இவர் முதலில் மாருதி கார்களை திருடியுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் கார்களை திருடத் தொடங்கிய அணில் சவுகான் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற மாருதி கார்களை குறி வைத்து திருடியுள்ளார். இவர் 800 மாருதி கார்களை திருடியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் திருடிய கார்களை நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி விடுவார். அதோடு கார் திருட்டின் போது பல டாக்ஸி டிரைவர்களையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து கார் திருட்டில் ஈடுபட்டு வந்த அணில் அசாம் சென்று ஒரு கட்டத்தில் செட்டில் ஆகிவிட்டார். அங்கிருந்து பல்வேறு சொத்துக்களை அணில் வாங்கி குவித்துள்ளார். இவர் மீது பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்பின் அணில் சவுக்கான் மீது இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ உடன் அணில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 5 வருடங்கள் சிறையில் இருந்த அணில் சவுக்கான் கடந்த 2020-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் இருக்கின்றனர்.
கடந்த 27 வருடங்களாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்த அணில் சவுக்கான் 5000-க்கும் மேற்பட்ட கார்களை திருடியுள்ளார். இவர் தற்போது ஆயுத கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து ஆயுதங்களை வாங்கி வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சப்ளை செய்துள்ளார். இவரிடமிருந்து 6 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும் டெல்லி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேஷ் பந்து குப்தா சாலையில் வைத்து அணில் சவுக்கானை கைது செய்துள்ளனர்.