இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு பா.ம.க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணிகளை நிரப்ப வேண்டும் என பா.ம.க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே மாணவர்களின் கல்விக்கு அடித்தளமாக திகழும் தொடக்க பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 29,418 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 69,640 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
இதனால் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட ஆசிரியர்கள் தேவை அதிகமாகவே இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 4,863 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன்பிறகு கடந்த வருடம் தொடக்கப் பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 1000-ம் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகள் விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது.
இதனால்தான் வடமாவட்டங்கள் தமிழகத்தின் பின்தங்கிய கல்வி மாவட்டங்களாக இருக்கிறது. மேலும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை 2 வருடங்களுக்கு ஒருமுறை செயல்படுத்த வேண்டும். அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். எனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற 80,000 ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்குவதோடு, இனி நடக்க இருக்கும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.