தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் போதிய சுகாதார வசதியில்லாமல், பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகரித்துவரும் விலைவாசி, உணவுப் பொருள்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக 2021ஆம் ஆண்டில் சுமார் 50 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. பஞ்சத்தில் வாடும் மக்களைப் பாதுகாக்க உடனடி தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பஞ்சத்தால் உயிரிழப்பதை தடுக்க போர்நிறுத்தம் அவசியம் என அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது. மேலும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஏமனில் பட்டினியால் வாடிவருவதாகவும் கவலை தெரிவித்திருந்தது.