பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு காரில் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து சென்று கொண்டிருந்த வழியில் திடீரென எதிரே வந்த லாரி கார் மீது மோதியதில் கார் பற்றி எரிந்தது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். நீலிமா தீக்காயங்களுடன் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை விபத்தாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொழுது இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்றும் இதற்கு மூலகாரணமாக இருந்தது மதுரையில் உள்ள ஒரு வக்கீல் மற்றும் இவரது உறவினரான மற்றொரு தொழிலதிபரும் ஆவார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
தொழில் போட்டி காரணமாக இருவரையும்கொலை செய்ய முயற்சித்ததில் மனைவி மற்றும் ட்ரைவர் சிக்கி கொள்ள ஆனந்த பாபு தப்பி விட்டார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதில் ஈடுபட்ட கூலிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட அவர்களை விசாரித்த அதிகாரிகள் தொலதிபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்ய ரூ50 லட்சம் வாங்கியது தெரிய வந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சமயத்தில் தீக்காயமடைந்த தொழில் அதிபர் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.