காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வர அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா அவரது முகநூல் முகவரியிலிருந்து அவர் காதலித்த பெண்ணின் தம்பியின் முகநூல் முகவரிக்கு காதலியுடன் எடுத்த புகைப்படங்களை அனுப்பி அக்காவை எனக்கு திருமணம் செய்து கொடுக்காவிட்டால் இதனை வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியதோடு, ஆபாசமாகவும் திட்டியுள்ளார். இதையடுத்து அவரது தம்பி பழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் வனத்துறை அதிகாரி ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.