வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வழக்கம் போல எட்டு மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் பிரபாகரன்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அருள் தன்னை ஏதோ மர்ம கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னை மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து அவரது மகனுக்கு போன் செய்த மர்ம நபர்கள் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் அருளை விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அருணின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறை நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த செல்போன் நம்பர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ளது தெரியவந்தது. இதனிடையே தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் பணத்தை குப்பம் மற்றும் கர்நாடக எல்லையான பங்காருபேட்டை இடையே வந்து அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு பணத்தைக் கொடுப்பதை போன்று சாதாரண உடையில் சென்ற ஜோலார்பேட்டை காவல் துறை அதிகாரி அவர்களை சுற்றி வளைத்து அருளை மீட்டதாக சொல்லப்படுகிறது. பின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.