மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் மதுவை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு 10 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுபான கடைகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மதுபான கடைகளின் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் பாட்டில்களில் 52 லட்சம் மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 7 அல்லது 8 கடைகள் மட்டுமே இருப்பதால் திட்டத்தை செயல்படுத்துவது எளிது என்றும் மாநிலம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்றும் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து கடைகளில் அமர்ந்து மது குடிப்பவர்களிடமிருந்து பாட்டில்களை திரும்ப பெறலாம் என்றும், வேறு இடங்களுக்கு வாங்கி சென்று மது குடிப்பவர்களிடமிருந்து பாட்டில்களை திரும்ப பெறுவது கடினம் என்றும் வழக்கறிஞர் கூறினார். இதற்கு நீதிபதி ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் ஒரு மாதத்திற்கு 51 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார். உடனே நீதிபதி ஒரு மாதத்திற்கு 51 கோடி பாட்டிலில் விற்பனை செய்யப்படுகிறது என்றால், சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார். மேலும் மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். மேலும் வழக்கை செப்டம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.