மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடு மண்டலம், சோதனை சாவடிகளில் இரவு பகல் பார்க்காமல் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரபட்சம் பார்க்காமல் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
மஹாராஷ்டிராவில் இதுவரை 1,809 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 678 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 போலீசார் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1, 38,845 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மஹாராஷ்டிராவில் இதுவரை 50,231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,635 உயிரினத்துல நிலையில் 14,600 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.வர்த்தக நகரான மும்பையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை உயர்வதால் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
மேலும் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரும் நபர்களால் தமிழத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறது. திருவண்ணாலையில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 39 பேரில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 30 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மகாராஷ்டிராவில் சிக்கிய தமிழர்கள் 1,096 பேர் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.