Categories
உலக செய்திகள்

“54 அவசர சட்டங்கள்”…. பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் சென்ற 2018 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார். இதற்கிடையில் அந்நாட்டில் முன்பே பல பொருளாதார சிக்கல்கள் நீடித்துவந்த நிலையில், இம்ரான்கான் பதவியேற்ற பின் அங்கு நிலைமையானது மேலும் மோசமாகியது. அதாவது அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகியது. அவ்வாறு வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

4 வருடங்களில் 54 அவசர சட்டங்கள்:
இதனிடையில் பிரதமர்இம்ரான்கான் தலைமையிலுள்ள அரசினை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதை அனைத்தையும் சமாளித்து ஆட்சியை நடத்துவதற்காக அந்த அரசு பல்வேறு அவசர சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாடாளுமன்றம் அமர்வு நடைபெறாத சமயத்தில் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டிய இத்தகைய சட்டங்களை ஆட்சி நடத்துவதற்காகவே இம்ரான்கான் அரசானது அடிக்கடி அமல்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த அடிப்படையில் ஆட்சியை தொடங்கிய 2018-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலும் 54 அவசர சட்டங்களை இம்ரான்கான் அரசானது அமல்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காசி பயீஸ் இசா மற்றும் அமினுத் தின் கான் போன்றோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்த நீதிபதிகள்  இம்ரான்கான் அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதாவது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், அவசரமான சூழ்நிலைகளில் மட்டும் அதிபர் மற்றும் மாகாண ஆளுநர்கள் அத்தகைய சட்டங்களை அமல்படுத்தலாம்.
ஆனால் சட்டங்களை வெளியிடுவதற்கான அவர்களின் அதிகாரம் அரசியல் அமைப்பால் சுற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாதபோது மற்றும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும் போது மட்டுமே அவசர சட்டங்களை அமல்படுத்த முடியும். இதனிடையில் கூறப்பட்ட முன் நிபந்தனைகளில் ஒன்று கூட இல்லாத நிலையில், அதிபரோ அல்லது ஆளுநர்களோ அவசர சட்டங்களை வெளியிட முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Categories

Tech |