Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு… மத்திய அரசு..!

நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15,525 பேரும், குஜராத்தில் 6,245 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,104 பேரும், தமிழகத்தில் 4,058 பேரும், ராஜஸ்தானில் 3,158 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,049 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,880 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 617 பேரும், குஜராத்தில் 368 பேரும், மத்திய பிரதேசத்தில் 176 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 140 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,183 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 548 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |