படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கிய பத்து பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகாரில் உள்ள மனேர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கங்கை ஆற்றின் மறுக்கரைக்கு சென்று தீவனம் சேகரித்து விட்டு நேற்று காலை 3 படகுகளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 2 படகுகள் ஒன்றுக்கு ஒன்று மோதியுள்ளது. இதனால் ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் படகில் இருந்த 55 பயணிகளும் ஆற்றில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு குழு அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 45 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் 10 பேரை காணவில்லை. இதனையடுத்து மீண்டும் அவர்களை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.