ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே, இந்தியா 1920லிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியது. இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்தும் வகையில் 1924இல் முதல் தேசிய விளையாட்டு போட்டி லாகூரில் நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடரானது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டுவந்தது.
1924 முதல் 1928வரை நான்கு முறை லாகூரில் நடைபெற்றுவந்த இந்தத் தொடர் 1930இல் அலஹாபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து, 1985லிருந்து இந்த தொடர், ஒலிம்பிக் பாணியில் தற்போது நடைபெற்றுவருகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடர் பல்வேறு காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்ததுவந்தது.
அந்தவகையில், நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் வரும் அக்டோபர் 20 முதல் நவம்பர் 4வரை நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த தொடர் நடத்தப்பட்டுவந்தாலும், ஏற்கனவே 2021இல் இந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை சத்தீஸ்கர் பெற்றது. இதனால், அடுத்த ஆண்டு சத்தீஸ்கரில் 37ஆவது தேசிய போட்டிகள் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பத்ரா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 2022இல் மேற்கு வங்கத்தில் 38ஆவது தேசிய போட்டிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், 57 வருடங்களுக்கு பிறகு இந்தத் தொடர் மீண்டும் மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது. முன்னதாக, 1938 மற்றும் 1964இல் இந்தத் தொடர் மேற்கு வங்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.