சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்..
வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. அதாவது, காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 5: 30 மணி நிலவரப்படி புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஒருவேளை பெருமழை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையானது விரைந்துள்ளது தற்போது சென்னையை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது மாண்டஸ் புயல்..
மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது நாளை நள்ளிரவு முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் உருவானதையொட்டி புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல நாகை, கடலூர், தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிவரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.