ஒடிசா மாநிலத்தில் பார்வையற்ற தம்பதியினருக்கு ஏழு மாத மின்சார கட்டணமாக 58 லட்சம் ரூபாய் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் என்ற பகுதியில் பிரசன்னா நாயக் என்பவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பார்வையற்றவர்கள். அவர்களின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள் 4 எல்இடி பல்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் குறைந்த அளவே மின்சார கட்டணம் செலுத்தி வந்த இவர்களுக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார கட்டணம் 18 ஆயிரம் ரூபாய் வந்திருந்தது. இதுபற்றி தொடர்புடைய அலுவலர்களிடம் முறையிட்ட பின்னர் 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்தனர். பின்னர் அவர்களின் வீட்டில் புதிய மீட்டர் பெட்டியை மின்வாரிய ஊழியர்கள் பொருத்தினர். சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பிரசன்னா வீட்டிற்கு எத்தகைய மின்சார கட்டணம் செலுத்துவதற்கான ரசீதும் வரவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணமாக 58 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ரசீது வந்திருக்கிறது. அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர்,” இவ்வளவு பெரிய தொகையை எங்களால் கட்டமுடியாது. எங்கள் குறைகளை தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவிப்போம். குறைகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நுகர்வோர் நீதி மன்றத்திற்கு செல்வோம்” என தம்பதியினர் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.