பர்கினோ பாசோவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 59 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பர்கினோ பாசோ நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றில் பல சுரங்கங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்லொரா என்னும் இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிதான தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, சுரங்கத்தில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இக்கோர விபத்தில் சுரங்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதுடன், ஊழியர்கள் 59 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்.
அதன்பின்பு, மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். வெடி விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.