இந்திய குடிமக்களின் அடையாளமாக ஆவணமான ஆதார் கார்டு நம் கருவிழி ரேகை, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு உள்ளது. ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டூப்ளிகேட் ஆதார் அட்டை குறித்து லோக்சபாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் இது போன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என பதிலளித்திருக்கிறார்.
இப்போது UIDAI ரத்துசெய்துள்ள ஆதார் கார்டுகளின் எண்ணிக்கையை வைத்து அதிகளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் எந்த பகுதியில் உருவாக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும். அத்துடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது, இதுவரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 5,98,999 டூப்ளிகேட் ஆதார் அட்டைகளை ரத்து செய்து இருக்கிறது. இவ்வாறு டூப்ளிகேட் ஆதாரை ரத்துசெய்யும் நடவடிக்கையானது தொடரும் என கூறியுள்ளார்.
ஆதார் அட்டைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் வழக்குகளை கருதி, மத்திய மற்றும் மாநில அளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னதாக ஆதார் கார்டு சரிபார்ப்புக்கு கை ரேகை மற்றும் கருவிழி ரேகை ஸ்கேன் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் குறிப்பிட்ட நபரின் முகம் சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறினார்.