தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தெலங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வருகிற 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்படுகிறது.நீங்கள் 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அன்று நள்ளிரவு (அதாவது வருகிற செவ்வாய்க்கிழமை) கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்ற வழித்தடங்களும் தனியாருக்கு விடப்படும்’ என சந்திர சேகர ராவ் எச்சரித்தார்.
இதன் மூலம் சந்திர சேகர ராவ் அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. முன்னதாக சந்திர சேகர ராவ் பேசும்போது, ‘போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் விதி மீறல். பண்டிகை காலத்தில் (பதுக்கம்மா பண்டிகை) அவர்கள் இவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். மேலும் எந்த சங்கத்தையும் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட உயர் நீதிமன்றம், ‘ பொதுமக்கள், தொழிலாளர்களை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தது.போக்குவரத்துத் துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.