இந்தியாவில் 5G சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 5G தொலைத் தொடர்பு சேவையானது அறிமுகம் செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தும் போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து செல்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையானது சம்மன் அனுப்பியிருக்கிறது.
அவற்றில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்டகுழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 5G அதிவேக இணையதள சேவையை செல்போன்களில் அளிக்கும் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மென் பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட இருக்கிறது.