இந்தியாவில் 5 ஆம் தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பமான 5 ஜியின் பதிவிறக்கம் வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5 ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது. 5 ஜி வரம்புக்குள் வரும் குறைந்த பட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையதள இணைப்புகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெல்லியில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏர்டெல் நிறுவன 5 ஜி பதிவிறக்கம் வேகம் 197.98 எம்பிபிஎஸ் வரை இருந்தது.
அதே நேரம் ஜியோ 5ஜி இணைப்பின் பதிவிறக்கம் வேகம் 598.58 எம்பிபிஎஸ் வரை இருந்தது. அதனை தொடர்ந்து வாரணாசியில் ஏர்டெல் 5ஜி போக்குவரத்து வேகம் 516.57 எம்பிபிஎஸ் வரை இருந்தது. ஆனால் கொல்கத்தாவில் அந்த நிறுவனத்தின் 5 ஜி வேகம் 271.07 எம்பிபிஎஸ் வரையிலும், ஜியோவின் வேகம் 515.38 எம்பிபிஎஸ் வரையிலும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சிலிகுரி, நாகபுரி, வாரணாசி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் சோதனை முறையில் தனது 5ஜி சேவை வழங்கி வருகிறது.