கென்யாவில் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவியை தற்பொழுது உயிருடன் பார்த்த கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கென்யாவை சேர்ந்த உச்சங்கா கயிரூ. இவரது மனைவி லஹிரா அபிகைல். கடந்த 2015ஆம் ஆண்டு லஹிரா உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது சடலத்திற்கு இறுதிச் சடங்கையும் செய்து வைத்துள்ளார் உச்சங்கா. இந்நிலையில் தற்பொழுது கென்யா தலைநகர் நைரோபியில் உச்சங்கா சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு தனது மனைவியை உயிருடன் ஒரு இளைஞருடன் பார்த்துள்ளார். அப்பொழுது 6 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த மனைவி இங்கு எப்படி நடந்து செல்கிறார் என உச்சங்கா அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார். பின்னர் உச்சங்கா அப்பெண்ணிடம் சென்று நீ லஹிரா தானே என்று கேட்டுள்ளார்.
அதற்கு அப்பெண்ணும் ‘ஆம்’ என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் லஹிரா இறந்துவிட்டதாக நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து உச்சங்கா காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கானது தற்பொழுது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளது. உச்சங்கா கூறியதாவது, “என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, அவள் என் எதிரில் புதைக்கப்பட்டாள். ஆனால் அவள் மீண்டும் உயிருடன் இருப்பதைப் தற்போது பார்த்தேன்” என்று அதிர்ச்சியுடன் பேசி உள்ளார். திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்க லஹிரா தனது போலி மரண நாடகத்தை அரங்கேற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காதலனுடன் வாழ விரும்புவதால் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவரது கணவர் உச்சங்காவோ விவாகரத்து வழங்க மறுத்து விட்டார். இதுபற்றி மனம் திறந்த லஹிரா, திருமணத்திற்கு பிறகு நான் நடத்தப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது, என் கணவருடன் மகிழ்ச்சியாக இல்லை, சுதந்திரம் தேவை என்பதால் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், நைரோபி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.