தூத்துக்குடி மாவட்டம் சிவகலை உட்பட 6 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகாநாத் சிங் படைகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுபிக்க மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளதாக கூறிய அமைச்சர் பாண்டியராஜன் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 15 சிலைகள் ஒரே வாரத்தில் இந்தியா கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் சிவகலை செக்காட்டி ஸ்ரீமூலக்கரை உள்ளிட்ட 6 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என தெரிவித்தார்.