முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து திரும்புபவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை காரணம் காட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 6 அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாந்தோம் செல்ல ஆட்டோக்களில் ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்பதாக பயணிகள் குமுறுகின்றனர். வெளியூர்களில் இருந்து பல கிலோ மீட்டர் பயணித்து சென்னையில் வெறும் ஆறு கிலோமீட்டர் தூரத்தை கடக்க 1000 கணக்கில் கட்டணம் கேட்க படுவதற்கு பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றனர். ஊரடங்கு நாட்களில் இது போன்ற கட்டண கொள்ளைகளில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.