Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“6 மகன்களும் என்னை கண்டுகொள்ளவில்லை” தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி…. சென்னையில் பரபரப்பு…!!

தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல்துறையினர் காப்பாற்றினர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான ஜானகி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி திருவொற்றியூர் டோல் கேட் அருகில் இருக்கும் கடற்கரைக்கு தற்கொலை செய்யும் எண்ணத்தோடு சக்கர நாற்காலியில் தனியாக வந்துள்ளார். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசேவ் மற்றும் காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் மூதாட்டி கூறியதாவது, எனது கணவர் குஞ்சுபாதம் துறைமுகத்தில் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 6 மகன்கள் இருக்கின்றனர். 6 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் அரசு தரும் ஊனமுற்றோர் உதவித் தொகையை வைத்து எனக்கு சொந்தமான வீட்டில் இருந்து சமைத்து சாப்பிட்டு வருகிறேன். இந்நிலையில் 6 மகன்களும் என்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் கடற்கரைக்கு வந்ததாக மூதாட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகன்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் மூதாட்டி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அளித்த தகவலின் படி மூதாட்டியின் மகன்களில் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அதன்பின் அறிவுரை கூறி மூதாட்டியை அவரது மகனுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |