தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக அளவு ரத்தப்போக்கு காரணமாக திடீரென இளம்பெண் உயிரிழந்தார் இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான இளம்பெண் பார்ப்பாரப்பட்டியில் இருக்கும் மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதனால் சம்பந்தப்பட்ட மருந்து கடையில் மருத்துவதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த மருந்து கடையில் இருக்கும் கீழ்த்தளத்தில் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மருந்து கடை உரிமையாளரான செல்வராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.