தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 48 மணி நேரத்திற்குள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.