சிந்த் மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
பாகிஸ்தான் நாட்டில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிந்த் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். இதில் ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் முகாமில் தங்கியிருந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சிறுமி ரசியாவின் தந்தை காலித் கோசோ கூறியதாவது, “எங்களது குழந்தை பசியால் தவித்தபோது, ரோரி நகரில் உள்ள முக்தியார்கர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்றோம். எங்களுக்கு உணவோ, கூடாரமோ வழங்கவில்லை. இந்த சூழலில் சிறுமி பசியாலும், நோயாலும் உயிரிழந்து விட்டார்” என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, வெள்ளம் பாதித்த 200 குடும்பத்தினர் சுக்கூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை தேவையான நேரத்தில் கொடுக்காமல் தவறியதில் சிறுமி உயிரிழந்துள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்ட பின்னர், சுக்கூரிலிருந்து ஜகோபாபாத் மாவட்டத்திற்கு நாங்கள் வந்தோம். அதிகாரிகளின் உதவிக்காக காத்திருந்தோம். ஆனால், விவரங்களை சேகரிக்கவே வந்த அதிகாரிகள், எங்களுக்கு உணவு, கூடாரம், கொசு வலை மற்றும் பிற தேவையான நிவாரண பொருட்கள் எதனையும் வழங்கவில்லை. இதனால், பசியால், நோயால் பாதிக்கப்பட்ட எங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க முடியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.