ஓமனில் பணிபுரியும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆட்டி படைக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு 200க்கும் அதிகமான நாடுகள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளன. உலக அளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2.50 லட்சத்தை நெருங்குகின்றது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து உலக நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி, ஒட்டுமொத்த மக்களையும் வீட்டுக்குள்முடக்கிவைத்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு சரிந்ததே இதற்க்கு சான்று. இந்த நிலை தற்போது ஓமன் நாட்டின் பொருளாதாரத்தையும் சிதைத்துள்ளது.
இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஓமன் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரை வேலையிலிருந்து நீக்குவதற்கான முடிவை எடுத்துள்ளது என்று பிரபல செய்தி நிறுவனமான கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓமன் அரசின் இந்த முடிவால் 6.5 இந்திய வம்சாவளிகளின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவையே தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.