தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் வணிகர்கள், பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல வேதாரண்யம் நகராட்சியில் நாளை முழு ஊரடங்கு என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவாரூரில் நாளை ஒருநாள் மட்டும் முழு முடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் வீட்டிற்கே வரும் என அவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.