6 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மாரியம்மன் கோவில் அருகாமையில் நின்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் திடீரென்று தப்பி ஓடியுள்ளார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சோழர் நகரில் வசிக்கும் சூரியமூர்த்தி என்பதும், செங்கமேடு முத்துமாரியம்மன் கோவில் உள்பட 6 கோவில்களில் இருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூரியமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.