ஐ.நாவின் உலக உணவு அமைப்பானது, இலங்கையில் சுமார் 60 லட்சம் மக்கள் உணவு கிடைப்பதில் நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான உலக உணவு அமைப்பினுடைய இயக்குனராக இருக்கும் அப்துல் ரஹீம் சித்திக், தெரிவித்திருப்பதாவது, ஆரம்பகால ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் 63 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது.
நாடு சுதந்திரமடைந்தது முதல் இப்போது வரை இல்லாத அளவிற்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வரை உணவு பணவீக்கத்தின் விகிதமானது 80%-க்கும் அதிகமாக இருந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
30 லட்சம் பேருக்கு உணவளிக்க 6.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை உணவு தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.