ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதத்தில் 6 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள பாண்டியூரில் கடந்த மே மாதம் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று சதீஷ்குமார் வெளியே வந்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி புகார் அளித்த அன்பழகன், ராஜ்குமார், மகமு குமார் உட்பட ஆறு பேரை சுரேஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து இரும்பு கம்பி மற்றும் மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 6 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக நேற்று மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நயினார்கோவில் காவல்துறையினர் சதீஷ்குமார் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.