டேங்கர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைபட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் வெல்டிங் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மினி வேனில் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இவர்களது மினி வேன் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் ரமேஷ், அவரது மனைவி தீபா, மகன் நித்திஷ், உறவினர்களான அஞ்சலி, சரளா போன்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ஓவியா மற்றும் சரிகா என்ற இரண்டு சிறுமிகளையும், நித்திஷ் என்ற ஆண் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். மேலும் படுகாயமடைந்த இரண்டு சிறுமிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.