6 வயது சிறுமிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தாயாருடன் பண்ருட்டி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்த தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான பரசுராமன் என்பவர் சிறுமியை தனது அருகில் அமருமாறு கூறியுள்ளார்.
அதன்பின் முதியவர் தானே என நம்பி சிறுமியின் தாய் தனது மகளை அவரின் அருகில் அமர வைத்துள்ளார். இதனையடுத்து சிறுமி திடீரென கதறி அழுததை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் ஏன் அழுகிறாய் என கேட்டுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனைக் கேட்ட சக பயணிகள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பரசுராமனுக்கு தர்ம அடி கொடுத்து அவரை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது பற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்துள்ளனர்.