புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோருக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழிவுநீர் தொட்டியில் மலம் கழிந்த சமூக விரோதிகள் மீது உடனடியாக கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். 60 வருடங்களுக்கும் மேலாக சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி என்று பேசி வரும் திராவிட கட்சிகள் இந்த மண்ணை இத்தனை வருடங்கள் ஆட்சி புரிந்த பிறகும் இன்னும் தீண்டாமை வன்கொடுமை நடப்பது திராவிட கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. எனவே இனியும் இது போன்ற தீண்டாமை வன்கொடுமைகள் நடப்பதை அனுமதிக்க கூடாது. மேலும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.