ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார்- கார்த்திகா. முத்துக்குமார் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கார்த்திகா கணினி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற பின்பு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
மேலும் வீட்டின் உள்ளே நுழைந்தவர்கள் பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்கம் போல் கணவன் மனைவி இருவரும் வேலை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினரிடம் தம்பதியினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் அகிம்சாபுரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.