இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது.
ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19,063 பேரும், குஜராத்தில் 7,402 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 6,318 பேரும், தமிழகத்தில் 6,009 பேரும், ராஜஸ்தானில் 3,579 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,341 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,214 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 731 பேரும், குஜராத்தில் 449 பேரும், மத்திய பிரதேசத்தில் 200 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 160 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847 ஆக அதிகரித்துள்ளது.